குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
- சுந்தரராமசாமி
சுந்தர ராமசாமி எழுதிய "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்"நாவலானது சிறந்த பின் நவீனத்துவ நாவலாகும்.பின்நவீனத்துவ கொள்கை தமிழில் துளிர்விட காரணமானவர்களுள் முக்கியமானவர் சுந்தர ராமசாமி.பசுவய்யா என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகள். எழுதியுள்ளார்
நாவலில் வரும் நிகழ்வுகள் 1937,38,39 ஆகிய வருடங்களில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கப் பட்டுள்ளது.நாவலில் நமக்கு எழும் சந்தேகங்களுக்கும்,கேள்விகளுக்கும் நாவலிலேயே பதிலிருக்கிறது.இது அனுபவத்தால் உணர்ந்த உண்மை.20க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் உலா வருகின்றன.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் ,இருப்பையும் வாசகர் நினைவில் நிறுத்த எழுத்தாளர் பல உத்திகளைக் கையாண்டு உள்ளார் என்பது உத்தமம்.
இந்த கதைக்கு யார் கதாநாயகன் என்றால்???எஸ்.ஆர்.எஸ் ,பாலு,லச்சம்,ஸ்ரீ தரன் இவர்களுள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.கதாநாயகி யாரென்றால்??? லட்சுமி, ஆனந்தம்,வள்ளி,சுகன்யா...இது கூட வாசகரின் எண்ண விருப்பப்படியே.
எஸ்.ஆர்.எஸ்.
முழுமையானதொரு நவீனவாதியாக உள்ளார்.ஒழுக்கம் , சுதந்திரம் போன்ற வார்த்தைகளுக்கு தனக்கென ஒரு வரையறை வைத்திருக்கிறார்.எல்லாம் ஒழுங்காக,முறையாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் வெளியில் மிகக் கண்டிப்பாக நடந்து கொள்வார்.அந்த கண்டிப்பு தன் மகன் மீதும்,ஏன் மனைவி மீது கூட தளர்ந்ததில்லை.நேர்மையாக இவர் இருந்தது அனைவரிடமும் நல்ல மரியாதை பெற வாய்ப்பாக இருந்திருக்கிறது.இவ்வளவு முறையாக நடந்து கொள்பவர் தன் மகன் பாலு விஷயத்தில் மட்டும் தப்புக்கணக்கு போட்டு விட்டதாகவும்,அதை சரிபடுத்திக்கொள்ள அவர் முயல்வதாகவும் கதை நகர்கிறது.என்னைப் பொறுத்தவரை எஸ்.ஆர்.எஸ் கதாபாத்திரமானது,தன் வாழ்வின் குணங்களை அடிப்படையாய் வைத்தே படைப்பாளர் உருவாக்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.அதற்கு முத்தாய்ப்பாக பெயரையும் வைத்திருக்கிறார். எஸ்-சுந்தர ஆர்-ராம எஸ்-சாமி
பாலு:
ஒன்பது வயது சிறுவனாக,எஸ்.ஆர்.எஸ்-லட்சுமி தம்பதியினரின் மகனாக வலம் வருகிறான்.அப்பாவின் மிதமிஞ்சிய கண்டிப்பாகத்,உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான்.அவன் மனதை அவன் சிறுவயதிலேயே அனுபவிக்கிற வலியை எளிய வார்த்தைகளில் மனதின் ஆழத்தை நடுங்க வைத்து விடுகிறார் படைப்பாளர்.
லச்சம்:
அவன் வயது குழந்தைகளுக்கு தெரியாததெல்லாம் லச்சத்திற்கு தெரியும்.வறுமையில் வாடுவதால் என்னவோ,எந்த வேலையையும் செய்வான்.அவனுக்கு எதுவுமே கீழாகப் பட்டதில்லை.அவன் இறந்த செய்தி கூட வாசகர் மனதில் அவ்வளவு ஆழமாக பதியவில்லை.அவன் இறப்பு நாவலில் ஒரு பகுதியே தவிர,அவனது இறப்பே நாவலாகி விடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்திருக்கிறார் எழுத்தாளர்.
ஸ்ரீதரன்:
மார்க்சியக் கருத்துக்கள் எல்லாம் பெரும்பாலும் இவன் மூலமாகவே பேசப்படுகிறது.வாழ்க்கைப் பற்றிய உறுதியான பிடிப்பை இவனது இருப்பு தெளிவுப்படுத்தும்.வாழ்க்கை வாழ்வதற்கே!!அதை யாருக்காகவும் விட்டு கொடுத்து விட முடியாது.ஏனென்றால் இது என் வாழ்க்கை என்ற கருத்துருவை ஆழம் பதிக்கும் பாத்திரம் இவனுடையது.
லட்சுமி:
எஸ்.ஆர்.எஸ்-ன் மனைவி லட்சுமி.சமுதாயம் சொல்லித் தந்திருக்கிற எழுதப்படாத சட்டங்களை தலையில் தூக்கி வைத்திருப்பவள்.மனிதன் எவ்வளவு நொந்து போனாலும் அந்த நம்பிக்கைகள் உடைபட்டு விடக்கூடாது என பதறுபவள்.ஆனால்,அந்த மனம் கூட கதையின் நிறைவில் கொஞ்சம் மாற்றம் பெற்றுவிடும்.அவளுக்கிருந்த நோயை விட ,அவளை பெரிதும் அரித்துக் கொண்டிருந்தது ,அவள் தூக்கி சுமந்த நம்பிக்கைகள் தான்.
ஆனந்தம்:
எஸ்.ஆர்.எஸ் வீட்டின் சமையல்காரி.இளம் வயதிலேயே கணவனை இழந்தவள்.எட்டு வருடம் கழித்து வேறொரு ஆணிடம் காதல் துளிர்க்கிறது.லட்சுமியால் அவள் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும்,செல்லப்பாவுடன் ஆனந்தம் சென்றுவிட்டது மறுமணத்தை பெரும் பாவமாக நினைத்த சமுதாயத்திற்கு சவுக்கடியாக அமைந்தது.
செல்லப்பா:
காந்தியைச் சிந்தனைகள் செல்லப்பாவால் மிக உயர்வானதாகக் காட்டப்படுகிறது.செல்லப்பா-ஆனந்தம் காதலானது எந்த இடத்திலும் பிசிறாக தோன்றவே இல்லை.இந்த காதல் வெறும் உடல்ரீதிக்காகவோ, ஈர்ப்பின் காரணமாகவோ தோன்றியதாக தெரியவில்லை.ஆத்மாக்கள் இரண்டற கலந்த பிறகு,சமுதாயத்தின் எல்லாக் குருட்டுத்தனமும் விழிப் பெற்றுக்கொள்கிறது.
வள்ளி:
லட்சுமியின் தங்கை.தன் நிறத்தின் காரணமாக அதிக அவமானங்களைச் சந்தித்தவள்.பிறகு,கற்க தொடங்கிய பின் உடலும் ,உள்ளமும் சுத்தப்படுகிறது.மிக எதார்த்தமான பாத்திரமாக வள்ளி சித்தரிக்கப் படுகிறாள்.ஸ்ரீதரனுடனான காதலில் உறுதியாக இருந்தும் ,தான் தவறே செய்யவில்லை என்று தெரிந்திருந்தாலும் அவர்களின் பிரிவு விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல முடியும்.
சுகன்யா:
ஸ்ரீதரனின் தங்கை.சமுதாயாத்தின் எல்லா சங்கிலிகளையும் அறுத்தெறிய ஆசைப்படுபவளாக,இப்படித்தான் வாழ வேண்டுமென்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணின் பிரதிநிதியாக சுகன்யா உள்ளாள்.
கோமதி:
இவளும் லட்சுமியின் தங்கை.வள்ளியைப் படிக்க வைக்க முடிந்த லட்சுமியால் கோமதியை படிக்க வைக்க முடியவில்லை.கல்வியின் மீது தணியாக்காதல் கொண்ட இவளால்,தளியல் நூலகத்தைத் தாண்டி எங்கும் போக முடியவில்லையே என்பது தான் சோகம்.
ஒப்பியல் நோக்கில் புதினம்:
ஓர் இலக்கியப் பனுவலை,பிறதொரு இலக்கியத்துக்கும்,இலக்கியங்களுடனும்,கலையுடனும்,கலைகளுடனும்,அறிவியல் துறைகளுடனும்,மற்ற துறைகளுடனும் ஒப்பிட்டு ஆராய்வது ஒப்பிலக்கியம் ஆகும் - ஹென்றி எச்.ரிமார்க்ஸ்.
1.இலக்கியத்தை ,இலக்கியத்துடன்:
#கோமதி மற்றும் ஹாலண்டா தோழியின் நட்பானது,வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போரில் இடம் பெறும் எமிலி-சின்னப்பாண்டி நட்பையும்,திலகவதி எழுதிய கல்மரம் புதினத்தில் இடம்பெறும் ராகினி-காவேரி நட்பையும் நினைவுப் படுத்துகிறது.
#ஆனந்தத்தின் மறுமணமானது , ஜெயகாந்தன் எழுதிய யுகசந்தி என்ற சிறுகதையில் இடம்பெறும் கீதாவின் மறுமணமுடிவை ஒத்து இருக்கிறது.
இலக்கியத்தை,கலையுடன்:
#ஓவியக்கலை - வள்ளியைப் பற்றியும்,ஸ்ரீதரனைப் பற்றியும்,சாமு சந்தித்த கிழவர் பற்றியும் அறிமுகம் செய்யும் போது,அவர்களது உருவ அமைப்பை வர்ணித்து,ஒவ்வொரு அங்கமாக வார்த்தைகளில் ஓவியம் வரைந்து போலிருந்தது.
#சிற்பக்கலை - கோவிலில் மூலவர் இருந்தாலும்,புடைப்புச் சிற்பங்களே கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.அதுபோல,முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தாலும் , சீதா,கைலாசமடம்,மாது,சேது அய்யர்,அனந்து,அப்புக்குட்டன்,அனந்தராமன்,கோபு,ருக்கு போன்ற பாத்திரங்கள் புடைப்புச் சிற்பங்களாகவே புதினத்திற்கு அழகு சேர்க்கின்றன.
#திரைப்படக்கலை - பாலுவை எஸ்.ஆர்.எஸ் வளர்க்கும் விதமும்,அவனை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதும், சமீபத்தில் வெளிவந்த பசங்க -2 திரைப்படத்தை நினைவுப் படுத்துகிறது.
இலக்கியத்தை,பிற துறைகளுடன்:
#தத்துவவியல் - மார்க்சியம்,காந்தியம்,பெண்ணியம் பற்றி அதிகம் பேசுகிறது.
அதிக நிலங்கள் வைத்திருந்தால் அதை உழவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும்.தொழிலாளிக்கே நிலம் சொந்தம் என்ற நிலை உருவாகி விடும் என்பதற்கு பயந்து நம்பூதிரிகளும்,நாராயண அய்யரும் நிலங்களை விற்று விடும் நிகழ்வு,மார்க்சியம் காலூன்ற வெகுகாலமில்லை என்பதற்கான முத்தாய்ப்பே.
ஸ்ரீதரன்,தர்க்கரீதியாக வெளிப்படையாக இருப்பதும் ,அழகு,வாழ்க்கை போன்ற கருத்துகளில் கம்யூனிசத்தை உள்வாங்கி இருப்பதும் மார்க்சியத்தோடு ஒப்பிட ஓர் காரணமாய் அமைகிறது.
#உளவியல் - உளவியல் சார்பாக மூன்று அத்தியாயங்கள் உள்ளன.பாலுவிற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரினால் பெரிதும் உளவியல் கருத்துகள் பேசப் படுகின்றன.தன் அப்பாவின் மீது இருந்த பயம்,பாலுவிற்கு மனிதர்கள் மேலே பற்றற்று அறுக்கும் நிலைக்கு தள்ளி விடுவது உளவியலாக ஏற்றுக் கொள்வதாக உள்ளது.
இலக்கியத்தை, அறிவியல் துறைகளுடன்:
#சார்பியல் கொள்கை - காலத்திற்கும்,இடத்திற்கும் பெரிதான வித்தியாசமில்லை.ஒன்றோடொன்று பிணைந்து இருக்கிறது என்பது சார்பியல் கொள்கை.அத்தியாயம் 32,296 ஆகியவற்றில் கதையே இல்லை.வெறுமனே மனிதர்களின் பழக்கவழக்கங்கள் மட்டுமே பேசப்படுகிறது.கதை இல்லையானாலும் அந்த காலத்தில் ,அந்த நேரத்தில் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன என்று காலத்தையும்,இடத்தையும் சார்பாக்கி இருக்கிறார்.1937,38,39 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் 2021 ல் நிகழ வாய்ப்பே இல்லை.காலமும், இடமும் தான் நிகழ்வை தீர்மானிக்கிறது.
#காரண காரிய ஆய்வு - ஏதோ ஒரு காரணத்திற்காகவே ,ஒரு காரியம் செய்யப்படுகிறது அல்லது நிகழப்படுகிறது என்பது காரண காரிய ஆய்வு.பாலுவிற்கு ஒழுங்க வரவேண்டும் என்பதற்காகவே ,எஸ்.ஆர்.எஸ் கண்டிப்பாக நடந்து கொண்டார் என்பது காரண, காரிய ஆய்வோடு ஒப்பீடு செய்ய வழிவகுக்கிறது.
#பாலு நிரந்தர மெழுகுவர்த்தியை கண்டுபிடிக்க முயல்கிறான் என்பது,ஏதோ ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு உருவாக ஒரு விதை தூவப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
இருத்தலியல் கொள்கை:
எவ்வளவு தான் மகிழ்ச்சியாக இருந்தாலும்,மனதின் உள்ளே ஒரு துக்கம் கசியத்தான் செய்கிறது - எஸ்.ஆர்.எஸ்
மனித மனம் ஒரு புதிர்.அதில் துக்கம் ஆழக் கிடக்கிறது.அமைதியாக இருக்கும் போதெல்லாம் துக்கத்தையே அதிகம் யோசிக்கிறது.பிறருக்கு உதவி செய்வது தான் துக்கத்தை மறக்க வழி என்று ,துக்கத்திற்கு தீர்வு காணாமல் அதை மறைக்க போர்த்திக் கொண்டு விடுகிறது என்பதெல்லாம் இருத்தலியல் கொள்கையை நினைவு செய்கிறது.
கட்டவிழ்ப்பு கொள்கை:
# மனைவியை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று சமுதாயம் சொல்லும் போது,எஸ்.ஆர்.எஸ் தன் மனைவியை பெயர் சொல்லி அழைக்கிறார்.
# காந்தியத்தை பின்பற்றும் பக்தராக செல்லப்பா இருக்கிறார்.காந்தியம் மக்களின் உயிர் மூச்சாக இருந்தது.ஆனால் கருநாகப்பள்ளி ஜோசப் அதை மறுதலித்து ,அன்பு,பக்தி என்பதெல்லாம் பசிக்கும்,வறுமைக்கும் தெரியாது .மக்கள் முன்னேற வேண்டுமானால் , தியாகம் தேவையில்லை,மேலாவனிடமிருந்து சொத்தை கொடுக்க சொல்கிறார்.
# ஆணும், பெண்ணும் சமமில்லை என்று சொல்கிறாள் லட்சுமி.ஆணைவிட பெண் உடலாலும் , மனதாலும் மேம்பட்டவள்.ஆண் செய்வதெல்லாம் பெண்ணும் செய்யலாம் என்கிறாள் சுகன்யா.
#சாதியை தூக்கிப் பிடித்த சமுதாயம் அது.சமுதாயத்தின் சீழ்ப்பட்டு போன சிந்தனைகளை தலைமேல் தூக்கி வைத்து லட்சுமி கூட ,"மனிதனை மனிதனாக பார்ப்பது பெருந்தன்மை அல்ல,குறைந்தபட்ச நாகரீகம்" என்றாள்.இவை போல பலவும் ,சமுதாயம் இதுவரை சொல்லிக் கொண்டிருந்த சிந்தனைகளை எல்லாம் மொத்தமாய் போட்டு உடைக்கிறது.
படிமமும்,குறியீடும் :
# ரமணி நிமிர்ந்து எரியும் சுடர் போல உள்ளாள்.
#வெடிமருந்து வைத்த பாறை சிதறுவது போல குடும்பம் சின்னாபின்னமானது.
#பலாக்காய்கள் ராட்சசியின் அடிதொடைகளை வெட்டி வைத்தது போலுள்ளது.
#தனிமையில் உள்ளவர்க்கு, பேச ஆள் கிடைத்தால் சிரங்கிற்கு சீழ் எடுத்தான் போலுள்ளது என்பது போல பல படிமங்களை பயன்படுத்தியுள்ளார்.
# ஸ்ரீதரன் - வள்ளி காதலை , ஆனந்தம் அறிந்த போது , " ரொம்ப இருட்டி விட்டது " என்று மனதிற்குள் சொன்னது இருளை அல்ல என்பதை வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.
# எஸ்.ஆர்.எஸ் இன் ஓவல் கண்ணாடி மேசை -அவரது தனித்துவத்தை ,கௌரவத்தை வெளிப்படுத்தும் குறியீடாக மாறியிருந்தது.
மற்ற புத்தகங்கள்,படைப்பாளிகள்:
ஒரு படைப்பாளி படைப்பை உருவாக்குகிற போது, படைப்பாளி தன்னை ஈர்த்தக் கருத்துக்களை சொல்வது அனிச்சை செயலே.
மில்ட்டனின் இழந்த சொர்க்கம்,கல்கியின் தியாகபூமி,கேதாரியின் தாயார் ஆகியவற்றை புதினத்தில் படைப்பாளர் பயன்படுத்தியிருக்கிறார்.தியாகபூமியை அடிக்கருத்தாய் வைத்தே ஆனந்தம் உருவாக்கப் பட்டாளோ என்னவோ.
மேலும் சில பழக்கவழக்கங்கள்:
# இன்று போலவே அன்றும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பது முக்கியமாக இருந்திருக்கிறது.
# கணவனை பெயர் சொல்லி அழைப்பதில்லை.அத்திம்பேர் என்று அழைத்திருக்கின்றனர்.
# கோட்டயத்தில் பெண்கள் வேண்டிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
# இரண்டு ஊர்கள் - தளியல் ,கோட்டயம் இரண்டு ஆறுகள்- மீனச்சல் ஆறு,பழையாறு
#சாப்பாட்டில் பொரியல் என்பது கறிகாய் என அழைக்கப்படுகிறது.
#பல்வேறான வட்டாரப் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
இங்ஙனம்,
தமிழவள் ஜெ.காமாட்சி காயத்ரி.

சிறப்பு க்கா
ReplyDeleteநன்றி தம்பி
ReplyDelete